சிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்

சிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்

Vishnuu Vishal Studioz நிறுவனத்தின் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாகவும், ரெஜினா கேஸண்ட்ரா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, கருணாகரன், ஆனந்த்ராஜ், ரவிசங்கர், லிவிங்ஸ்டன், மன்சூரலிகான், ‘ஆடுகளம்’ நரேன், ஓவியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – விஷ்ணு விஷால், கிரியேட்டிவ் தயாரிப்பு – அனிதா மகேந்திரன், எழுத்து, இயக்கம் – செல்ல அய்யாவு, இசை – லியோ ஜேம்ஸ், ஒளிப்பதிவு – லட்சுமண், படத் தொகுப்பு – ரூபன், பாடல்கள் – மதன் கார்க்கி, நடன இயக்கம் – ஷெரீப், சண்டை இயக்கம் – விக்கி, கலை இயக்கம் – பி.சேகர், மக்கள் தொடர்பு – நிகில்.

இந்தப் படத்தை நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலமாக வெளியிட்டுள்ளார்.

சத்தியமூர்த்தி என்னும் விஷ்ணு விஷால் திண்டுக்கல் அருகேயிருக்கும் சிலுக்குவார்பட்டி என்னும் ஊரின் போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக இருக்கிறார். போலீஸாகவே இருந்தாலும் தைரியமில்லாதவர். எதற்கெடுத்தாலும் பயப்படுபவர். சுருக்கமாகச் சொன்னால் ‘தொடை நடுங்கி பயில்வான்’..!

இவருடைய தாய் மாமா மாரிமுத்து. இவருடைய மகள் ராஜலட்சுமி என்னும் ராஜி என்னும் ரெஜினா. சின்ன வயதிலேயே ரெஜினா மீது விஷால் கண் வைத்துவிட.. இதையறிந்த மாரிமுத்து தன் மகள் ரெஜினாவை வெளியூரில் கொண்டு போய் படிக்க வைக்கிறார். படிப்பை முடித்துவிட்டு ரெஜினா ஊர் திரும்ப.. விஷ்ணுவும் கான்ஸ்டபிள் வேலைக்குப் போகவும் நேரம் சரியாய் இருக்கிறது. திரும்பவும் இளம் காதலர்கள் சந்தித்துக் கொள்ள.. காதல் பிறந்து, காதலர்கள் காதல் வானில் பறக்கின்றனர்.

இந்த நேரத்தில் ‘சைக்கிள்’ சங்கர் என்னும் மிகப் பெரிய ரவுடியான ரவிசங்கரை சென்னை மாநகர போலீஸ் வலைவீசித் தேடி வருகிறது. அவனை என்கவுண்ட்டரில் சுட்டுத் தள்ளவும் உத்தரவிடுகிறார் சென்னை மாநகர போலீஸ் ஆணையர் ‘ஆடுகளம்’ நரேன்.

அந்த ரவிசங்கர் பாண்டிச்சேரியில் மறைந்திருக்கும் நேரத்தில் திண்டுக்கல் மாவட்ட அமைச்சர் போனில் அழைத்து திண்டுக்கல் மாவட்டத்தில் தனக்கு எதிராக அரசியல் செய்யும் மன்சூரலிகானை கொலை செய்யும் அசைண்மெண்ட்டைக் கொடுக்கிறார்.

அமைச்சரே சொல்லிவிட்டாரே என்பதால் ரவிசங்கரும் திண்டுக்கல் வருகிறார். வந்த இடத்தில் சரக்கு அடிக்கலாமே என்று டாஸ்மாக் பாரில் அமர்ந்து மதுவைக் குடிக்கிறார் ரவிசங்கர். அந்த நேரத்தில் அங்கே வரும் கான்ஸ்டபிள் விஷ்ணு விஷால் ஆசை, ஆசையாக ஒரு ஆஃபாயிலை வாயில் தள்ளப் போகும் நேரத்தில் ரவிசங்கர் அதைத் தள்ளிவிட்டுவிட.. நொடி நேரத்தில் கோபமான விஷ்ணு விஷால் ரவிசங்கரை அடித்து உதைத்து ஸ்டேஷனுக்கு இழுத்து வந்து லாக்கப்பில் அடைத்து வைக்கிறார்.

தன்னை தமிழகம் முழுவதும் போலீஸ் வலைவீசி தேடி வருவதால் தான் யாரென்பதை சொல்ல முடியாமல் தவிக்கும் ‘சைக்கிள்’ சங்கரை லாக்கப்புக்குள் வைத்தும் அடித்து, உதைத்து அவமானப்படுத்துகிறார் விஷ்ணு விஷால்.

‘சைக்கிள்’ சங்கர் சிலுக்குவார்பட்டி போலீஸ் ஸ்டேஷன் லாக்கப்பில் இருப்பதை அறியும் அவரது கூட்டாளிகள் போலீஸ் ஸ்டேஷனில் தாக்குதல் நடத்தி சைக்கிள் சங்கரை விடுவிக்கிறார்கள். ‘சைக்கிள்’ சங்கர் வெளியில் வந்தாலும் தன்னை அடித்து, உதைத்து அவமானப்படுத்திய சத்தியமூர்த்தி என்னும் விஷ்ணு விஷாலை கொலை செய்யாமல் ஓய மாட்டேன் என்று சபதம் எடுக்கிறார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியாகும் விஷ்ணு விஷால் பல பல மாறுவேடங்களில் தப்பியோடி ஒளிகிறார். அதே பகுதியில் தொடர்ந்து தலைமறைவாக இருந்த நிலையிலேயே விஷ்ணு விஷாலை கொலை வெறியுடன் தேடி வருகிறார் ‘சைக்கிள்’ சங்கர். கடைசியில் என்ன ஆனது என்பதுதான் இந்தக் காமெடி கலாட்டாவான படத்தின் திரைக்கதை.

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தின் கதாசிரியரான செல்லை அய்யாவுவை இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக்கியிருக்கிறார் விஷ்ணு விஷால். ‘முண்டாசுப்பட்டி’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘கதாநாயகன்’ வரிசையில் தனக்கு காமெடிதான் செட்டாகும் என்று நினைத்து இந்தக் காம்போ உருவாகியிருக்கிறது போலும்..!

விஷ்ணு விஷாலுக்கு இந்த அப்பாவித்தனம், பயந்த சுபாவம் கொண்ட கேரக்டர் பொருந்தியே வருகிறது. அதற்காக லாஜிக் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்காக கேரக்டர்கள் ஸ்கெட்ச்சுகளை அமைக்க வேண்டும்..? லிவிங்ஸ்டனின் கேரக்டர் ஸ்கெட்ச்சே இதற்கொரு உதாரணம்..!

ஒரு கான்ஸ்டபிளாகக்கூட இருக்கத் தகுதியற்ற அளவுக்கான அறிவுடன் இருக்கும் அவரை இன்ஸ்பெக்டராக்கி தொலைத்திருக்கிறார்கள். விஷ்ணு விஷாலின் கேரக்டர்கூட ரெண்டுங்கெட்டான்தான். போலீஸ் வேலைக்கென்று வந்தவர் ஆபீஸ் பாய் மாதிரி டீ, காபி, பன் வாங்கிக் கொடுத்தே காலத்தை ஓட்டிவிடலாம் என்கிறார். ஆனால் ரதி போலிருக்கும் முறைப் பெண்ணை இந்த கான்ஸ்டபிள் வேலையை வைத்தே கல்யாணம் செய்து கொள்ளவும் ஆசைப்படுகிறார்.

அந்த அப்பாவித்தனம், பயந்த குணம், எதற்கும் கவலையில்லாத சுபாவம்.. ஆனால் ஒன்றேயொன்று.. தான் சாப்பிடும்போது அதனை யாராவது தட்டிவிட்டால் அவன் செத்தான் என்கிற ரேன்ச்சுக்கு அவர் காட்டும் உதார் மட்டுமே ரசிக்கக் கூடியதாக இருக்கிறது.

லாக்கப்பில் வைத்து ‘சைக்கிள்’ சங்கரை வெளுக்கும் காட்சியில் விஷ்ணு காட்டும் ஆவேசத்திலும் கான்ஸ்டபிள் சத்தியமூர்த்தி தெரிகிறார். ஆனால், பிற்பாடு அவர்தான் சைக்கிள் சங்கர் என்று தெரிந்தவுடன் பயத்துடன் ஓடும் காட்சியிலும் பெரிதும் சிரிக்க வைத்திருக்கிறார் விஷ்ணு.

ஆனால், ‘சைக்கிள்’ சங்கருக்காக பயந்து ஓடி ஒளியும் காட்சிகளில் கெட்டப்பை மாத்தி, மாத்தி பல்வேறு தோற்றங்களில் வந்து காட்சி தருவது வம்படியான திணிப்பாக இருக்கிறது. ரசிக்க முடியவில்லை.

இப்படியொரு டீச்சர் எந்த ஊரில், எந்த அரசுப் பள்ளியில் இருக்கிறாரோ தெரியவில்லை. ஆனால் இருக்கக் கூடாத டீச்சரை, காட்டக் கூடாத விதத்தில் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

டிரான்ஸ்பரண்ட் சேலை, முதுகு தெரியும் ஜன்னல் வைத்த ஜாக்கெட் என்று ரெஜினா நடந்து வரும் காட்சியில் என்னவோ அவரது ரசிகர்களுக்கு மனதில் பட்டாம்பூச்சி பறக்கலாம். ஆனால் அவர் ஒரு பள்ளி ஆசிரியை என்பதை நினைத்தால் கசப்பாகத்தான் இருக்கும். உடைகளில் கொஞ்சம் கண்ணியத்தைக் கொடுத்திருக்கலாம்.

இது போன்ற படங்களில் ஒரு நாயகிக்கு என்ன வேலையோ அதுதான் இந்தப் படத்திலும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதையே கச்சிதமாகச் செய்திருக்கிறார் ரெஜினா.

பழைய 1980-களின் படம் போலவே மார்க்கெட்டுக்குள் நுழைந்து மாமூல் வசூலிக்கும் ஆனந்த்ராஜ் அண்ட் கோ, விஷ்ணு டீமை பார்த்து ஓடி ஒளிவது ஒரு தமாஷ். அதேபோல் சிங்கமுத்து தனது ஆட்களுடன் டாஸ்மாக்கில் செய்யும் அலப்பறையும், லாக்கப்பில் பேசும் வசனங்களும் அக்மார்க் காமெடி.

சிங்கமுத்து கொஞ்சம் கேப்விட்டால் கிடைத்த கேப்பில் கெடா வெட்டுகிறார் யோகி பாபு. ‘சைக்கிள்’ சங்கரின் கூட்டாளியாக வரும் இவர் அடிக்கடி உதிர்க்கும் பொன் முத்துக்கள்தான் தியேட்டரில் ஏக கை தட்டலை வரவழைத்திருக்கிறது.

யோகிபாபு, ஆனந்த்ராஜ், சிங்கமுத்து கூட்டணியால்தான் இந்தப் படத்துக்கு நகைச்சுவை படம் என்ற பெயர் கிடைத்திருக்கிறது என்று சொன்னால்கூட அது தவறில்லைதான்.

தமிழக போலீஸ் ஒட்டு மொத்தமாகத் தேடும் ‘சைக்கிள்’ சங்கராக சாய் ரவி நடித்திருக்கிறார். ஒரு சுள்ளான்போய் தன்னை அடித்துவிட்டானே என்கிற அவமானத்தில் அவர் கொதிக்கும் கொதிப்பு சிறப்பு. அவரது பழி வாங்கும் உணர்வு மிக நியாயமானது என்பதைச் சொல்லும்வகையில்தான் விஷ்ணுவுடனான அவரது மோதல் இருக்கிறது.

இடையில் ‘சைக்கிள்’ சங்கரின் ஐ போனை வைத்து ‘லொள்ளு சபா’ மனோகர் செய்யும் காமெடியும் சிரிக்க வைக்கிறது. ஆனந்த்ராஜின் ஷேர் ஆட்டோ காமெடி, மன்சூர் அலிகானைத் தேடி அவரது அடிப்பொடிகள் செய்யும் பாத்ரூம் காமெடி, சிங்கமுத்துவின் கல்யாண மண்டப காமெடி என்று படத்தின் பிற்பாதியில் விழுந்து, விழுந்து சிரிக்கும்படியாக படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர். 

எதற்கும் விட்டுக் கொடுக்காத முறைப்பான தாய் மாமனாக மாரிமுத்து, அலட்டல் இல்லாத அரசியல்வாதியாக மன்சூர் அலிகான் இருவரும் பாத்திரம் அறிந்து நடித்துள்ளனர்.

ஒரேயொரு பாட்டுக்கு ஆட்டம் போட்டுவிட்டு, ஒரே ஒரு காட்சியில் வந்துவிட்டு தன் பாட்டுக்குப் போகிறார் ஓவியா.

கிளைமாக்ஸ் காட்சியில் ‘பாட்ஷா’ மற்றும், ‘கேப்டன் பிரபாகரனை’ வைத்து ஆனந்த ராஜ் மற்றும் மன்சூர் அலிகானை கலாய்க்கும் காட்சிகளும் மிகப் பொருத்தமானவை.  

ஒளிப்பதிவாளர் லஷ்மணனின் கேமிரா மிகப் பெரிய பட்ஜெட் படம் போல காட்சிகளைப் படமாக்கியிருக்கிறது. துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் ஒரே டோன்தான். கொஞ்சமும் குறைவில்லாமல் அழகுற படமாக்கியிருக்கிறார்.

காதல் காட்சிகள், டூயட்டுகள், காமெடி கலாட்டாக்கள் குறிப்பாக கல்யாண மண்டபத்தில் ரவுடிகள் பாத்ரூமில் நுழைந்து தேடும்போது சாதாரணமான வசனமே இல்லாத காட்சியிலும் சிரிக்க வைப்பதுபோல காட்சிகளை அமைத்து அதற்குத் தோதாக கேமிரா கோணத்தை வைத்து ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். பாராட்டுக்கள்.

இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையில் ‘டியோ ரியோ டியா’ பாடல் திரையில் ஒலித்தது. ஓவியாவின் ஆடலினால் பாடல் காட்சி கவர்ந்தது. ‘ஏய் டம்மி பட்டாசு’ பாடலுக்கு இத்தனை வேகமான டியூனையா அமைக்க வேண்டும்..? பாடல் வரிகளைக் கேட்டு உணர்வதற்குள் பாடலே முடிந்துவிட்டது. ஆனால் காட்சிகளினால் திரைக்கதையை கொஞ்சம் நகர்த்தியிருப்பதால் பாடல் ஓடினதே தெரியவில்லை. ‘மயக்காதே’ பாடல் அழகான மெலடி. அழகான பாடல் காட்சிகள்.. லொகேஷன்கள். படமாக்கல் என்று ரசிக்க வைத்திருக்கிறார்கள். கூடுதலாக காமெடிக்கேற்றாற்போல பின்னணி இசையை அமைத்துக் கொடுத்து நல்ல பெயர் எடுத்திருக்கிறார் இசையமைப்பாளர்.

படத் தொகுப்பாளர் ரூபனின் கத்திரி வேலைக்கு இன்னும் கொஞ்சம் வேலை கொடுத்து இரண்டாம் பாதியில் கை வைத்திருந்தால் படம் இதைவிடவும் சிறப்பாகவே இருந்திருக்கும்.

லாஜிக் பற்றியெல்லாம் கவலையேபடாமல், ஒரு நகைச்சுவை படமாக, விறுவிறுப்பான திரைக்கதையில், சேஸிங்கான கதையை கொடுத்திருக்கிறார் இயக்குநர் செல்லா அய்யாவும். ஆனால் இதில் பாதியளவுதான் அவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.

புதிதில்லாத கதைக்குள், பழக்கமான திரைக்கதையில், காமெடி நடிகர்கள் அனைவரையும் திணித்திருக்கும் இயக்குநர், இவர்களது நகைச்சுவை டிராக்கை மட்டுமே நம்பி படத்தை உருவாக்கியிருக்கிறார்.

இது போன்ற படங்களுக்கே உரித்தான கல்யாண வீடு கலாட்டா, உருட்டுக் கட்டை தாக்குதல், ஆள் மாறாட்ட பிரச்சினை, சாக்கு மூட்டையில் ஆள் கடத்தல், பறந்து வரும் டாடா சுமோக்கள், டாஸ்மாக் கலாட்டாக்கள், மாறுவேட காமெடி என்று அனைத்துவித காமெடி திரைக்கதையையும் இதில் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

சிறந்த நகைச்சுவை நடிகர்களை படத்தில் வைத்திருப்பவர்கள் அவர்களை வைத்து இன்னும் அதிகமான காமெடியான காட்சிகளை வைத்திருந்தால் படம் இதைவிடப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும்.